பக்கங்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ஆடி அமாவாசை முழு நிலவின் மறுபக்கம்


காட்சிகள் யாவும் சாட்சிகளல்ல அவை மாயைகளாகவும் இருப்பதுண்டு. நிலா என்றுமே தேய்வதுமில்லை வளர்வதுமில்லை. ஆனால் தேய்ந்து வளர்வது போல்த் தோற்றமளிக்கிறது.

அவ்வாறே சூரியன் காலையில் எழுந்து பூமியைச் சுற்றி வட்டம் போடுவதில்லை ஆனால் அவ்வாறே புலப்படுகிறது. பூமிதான் தானும் சுற்றி சூரியனையும் சுற்றுகிறது. எல்லாமே நாங்கள் அனைத்தையும் எவ்வாறு எங்கிருந்து எப்போது? பார்க்கிறோம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்த தோற்ற மாயைகளே!. ஆய்வின்மையால் இந்த உலகில் பெரும்பாலானவை சரிவரப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பாமரர் உணர்ச்சிவழி போகையில் மற்றவர்கள் ஆராயும் முனைப்பின்றி உலகாயுதப் போக்கில் முடிவுகளை எடுக்கின்றனர். ஏற்கனவே வேண்டிய அறிவுரைகள் எல்லாம் என்றோ வளர்ந்து விட்ட நமது தமிழ் இனத்தில் நிறைந்திருப்பதால் ஆராய்வின்மை தமிழரின் தேசியக் குறைபாடாகே தொடர்கிறது. கண்ணால் கண்டதும் பொய் காதாற் கேட்டதும் பொய் என்ற பழமொழியின் அர்த்தமே எதையுமே தோற்றமளிப்பதைப்போல் கேள்விப்படுவதைப் போல் அப்படியே எடுத்துக் கொள்ளாது தீர விசாரித்து ஆராய்ந்து அறிவார்ந்த முடிவை எடு என்பது தான். “மாதா - பிதா - குரு - தெய்வம்” என்பதும் ஆய்விற்குரிய ஒரு தத்துவார்த்த வரிசையாகும். இது ஒரு வகையில் ஆரோகணம் போல் உயர்வதாகவும் உள்ளது வேறொரு ரீதியில் அவரோகணம் போல் தாழ்வதாகவும் உள்ளது. தெரியவும் புரியவும் இலகுவான அன்னையை முன்னே வைத்து உணரக் கூட கடினமான கடவுளை இறுதியில் வைத்துள்ளமை இறங்குவரிசை என்றால் அறிவு ஞானம் என்று பாரக்கின்ற போது தெய்வமான கடவுளே அதி உயர்ந்தவர் எனபதால் இதே ஒழுங்கு ஏறு வரிசையாகிவிடுகிறது. இது தந்தை அன்னையைவிட அறிவார்ந்தவர் என்பதை காட்டுகிறது. முழு நிலவைப் போல் தெளிவாகத் தெரியும் இதமான குளிர்ந்த அரவனைப்பு அன்பு அன்னையினது. அமாவாசை போல் புலப்படாத ஆனால் யதார்த்த நிஜ அக்கறைநிறை கண்டிப்பு தந்தையினது. உணர்வு பூர்வமானவள் அன்னை. அறிவு பூர்வமானவர் தந்தை. ஞானத்தை சுட்டி எட்ட உதவுபவர் குரு. அந்தப் பரிபூணர ஞான ஒளிப் பிளம்பே இறை……மாதா - பிதா - குரு - தெய்வம். விலங்குகளும் இலகுவில் காணும் அரும் பொருள் அம்மா. விளங்கவும் கடினமான பரம் பொருள் கடவுள். இதயத்தை இதமாக வருடிபவள் அன்னை. வாரிசுகளின் மனதையும் சிந்தனையையும் செயல்களையும் பண்படுத்திச் செம்மைப்படுத்துபவர் தந்தை. அறிவைப் பெருக்குபவர் குரு. ஞானத்தை உணர்த்துபவர் ஆண்டவர். கண் காணும் முன்னறி தெய்வங்கள் பெற்றார். பின்னே அறியப்படும் அம்மை அப்பனே இறைவன். வயிற்றுப் பசியைப் போக்குபவள் தாய் என்றால் அறிவிற்குரிய அரிசியை ஆக்குபவர் தந்தை. உடல் உணர்வு சார்ந்தவள் தாய் என்றால் உள்ளம் அறிவு சார்ந்தவர் தந்தை. தாய் தெளிவாகத் தெரியும் சித்ரா பௌர்ணமியின் பக்கமென்றால் ஆடி அமாவாசை புரியப்பட வேண்டிய அதே முழ நிலவின் புலப்படாத மறு பக்கமாகும். பறுவம் என்றாலும் அமாவாசை என்றாலும் நிலா ஒன்று தான். இரவும் வரும் பகலும் வரும் நாள் என்பது ஒன்று தான். உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்று தான். இரண்டும் ஒன்றே…… அனைத்தும் ஒன்றே. இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் கதிரியக்க சக்திப் பெருங்கடல் ஒன்றே. அதனால்த் தான் “நீயே அது” என்கிறது அத்வைதம். நிற்க! இதமான குளிர்மையான அழகிய சித்ராப் பௌர்ணமி அன்னைக்கு. தெரியாத இருண்ட ஆடி அமாவாசை தந்தைக்கு. ஒளியும் இருளும் சேர்ந்ததே முழுமை. இன்ப துன்பத்தில் இன்பத்தை மட்டும் அனுபவித்தவன் அரை மனிதன். இன்பத்தோடு துன்பத்தையும் கடந்து களவையும் கற்று வந்தவனே முழு அனுபவஸ்தன். வெற்றியை மட்டும் கண்டு வந்தவன் அதிஷ்டசாலியாக இருக்கலாம். தோல்வியின் படிப்புப் படிகளிலும் ஏறி ஏறி மேலே வந்தவனே அறிவாளி. இதை எழுதும் உடலிற்கு கருவறையிலேயே உதிரம் தந்தவள் என் அன்னை. இதை எழுதும் இயலுமையைத் தந்தவர் பூக்கள் நிறைந்த ஏரிகளைக் கொண்ட தீப வம்சமும் குறிப்பிடும் பண்டைய நகரமான “பூ நகர ஏரியில்” (பூநகரில்) வாழ்ந்த சித்த ஆயுள் வேத அய்யன். எழுதக் கற்றுக் கொடுத்தவர் குரு. இப்படி எழுத வேண்டும் என்பதையே எழுதி வைத்தவன் ஆண்டவன். மாதா பிதா குரு தெய்வம் - இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஒன்றில்லாமல் மற்றதும் இல்லை. கவியரசு கண்ணதாசன் - அவன் பலரிற்கும் கால எல்லை கடந்த குரு. புவியரசுகளின் நில கால எல்லைகளையும் தாண்டியவன் கவிஞன். நாங்கள் இன்று தந்தையுடனேயே நிற்போம். பத்து வயதிலேயே பள்ளிக்காய் வீட்டைத் துறந்த எனக்கு தாய் போலவும் தோன்றியவர் என் தந்தையே. இன்று நாட்டையும் இழந்து கொண்டிருக்கையில் நமது இன்றைய கீரிமலை கனடா ஏரிக்கரையே. ஏங்களிற் பலர் நமது தந்தையரை தவறவிட்ட பின்னரே புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் தவறிவிட்ட பிறகே இறையின் துறைக்குள் நுழைகிறோம். தாயின் தயவை பிறக்க முன் கருவறையிலேயே உணர்கிறோம். எங்களிற்காக அடி வயிற்றில் நாமிருந்த போதே நமக்காக அன்றே சுவாசித்ததுடன் உதிரம் தந்தவள் தாய். . ஆம் ஜனனத்திற்கும் முந்திய தெரிதல் அனனை. மரணத்தின் பின்னான புரிதல் கடவுள். இரண்டிற்கும் நடுவே 40 வயதிற்கு பின்னான புரிதல் தந்தை. ஜனனம் நிறைவடையும் போதாவது தெரிபவர் தந்தை. மறைவு அது ஒரு முடிவல்ல.- அது அடுத்த சுற்றிக்கான ஆரம்பம். அஸ்தமனம் முடிவென்றால் மேற்கில் மறையும் சூரியன் மறுநாள் எழுந்திருக்கவே முடியாது. கீழே விழும் விதை முளைக்கவும் இயலாது. எனவே மரணம் ஒரு முடிவுப் புள்ளி அல்ல - அடுத்த மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளியும் அதுவே. ஒரு புறத்தில் முடிவு அடுத்த பக்கத்தின் தொடக்கம். இங்கே கனடாவில் மரணத்துடன் ஒரு உரையாடலையே எழுதியுள்ளார் அறிவு சால் யோகாச்சார்யா அவர்கள். அதைக் கிட்டும் போது வாசிக்கலாம் என்று தொடாது வைத்துள்ள பலரில் நானும் ஒருவன். ஏதோ இன்னும் வயதாகிவிடவில்லை என்ற நினைப்பு எங்களிற்கு. மனித வாழ்க்கை என்பதே ஒரு வகையில் மரணத்தை நோக்கிய பயணம் தான் என்பதை உண்ரந்தவர்கள் மரணத்தை இப்படித்தான் பார்ப்பார்களோ என்னமோ! அதனால்த் தான் எத்திசையில் ஓடுகிறோம் என்பதைத் ஆராயாது நாம் “கேக்” வெட்டி கொண்டாடுகிறோம் நமது பிறந்த நாளை … ஒரு பூவானது பிஞ்சாகிக் காயாகி கனியாகி உதிர்வது ஒரு முடிவு தான் என்றாலும் அதுவே இன்னொன்றின் ஆரம்பப் புள்ளியாகிவிடுகிறது. அது ஒரு சுற்றின் தற்காலிக முடிவே ஒழிய அதுவே அடுத்த சுழல்வின் தொடக்கம். பிறவிப் பெருங்கடலில் அது ஒரு நிலைமாற்றமே. ஆனால் நாங்களோ அதற்காக அழுகிறோம். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? பழுதடைந்த சட்டயை நாம் வீசி அடுத்த புதிய சட்டையை அணிந்தே ஆக வேண்டும் அதுவும் பழையதாகும் வரை…..ஓ! என்னதான் தத்துவம் பேசினாலும் இந்தப் பிரிவுத் துயர் இருக்கிறதே அது கொடுமையானது. அது யாரையும் விட்டு வைப்பது இல்லை. பட்டினத்தாரே பாடி அழதாரே அன்னையை இழந்த போது……. இரவும் பகலும் வரும் வாழ்க்கை ஏதோ ஒன்று தான். உறவும் வரும் பிரிவும் வரும் ஆனால் நான் ஒருவன் தான் ஏகத்துள் அநேகம் - ஜீவாத்மா அநேகத்தையெல்லாம் உள்ளடக்கிய ஏகம் - பரமாத்மா. ஜீவாத்மாவே பரமாத்மா…அதனால் நீயே அது! கீரிமலைத் துளி நீரும் பூகோள சமுத்திர ஜலமும் ஒன்றே. காற்றுக்கேது தோட்டக்காவல் போடி தங்கச்சி! கடலிற்கேது எல்லைக் கோடு? மண்ணில் தோன்றி அக்னியில் தோய்ந்து காற்றில் எழுந்து வின்னில் நிற்கும் அந்த ஆத்மாக்களிற்கு சமுத்திரத்தில் ஒரு கலப்பு. பஞ்ச பூதங்களின் ஐந்தொழிலையும் உருவகிக்கும் நாட்டிய தாண்டவப் பொன்னம்பலத்தானை நாளைய தினம் நாமும் அர்ச்சிப்போம் - நம் தந்தையரது மோட்சத்திற்காய். கீரிமலைக் கடலும் புலம் பெயர் தமிழர்களின் பூகோள சமுத்திரங்களும் ஒன்றே! இருளும் வரும் ஒளியும் வரும் நிலவு ஒன்று தான். பறுவமும் வரும் அமாவாசையும் வரும் நிலா ஒன்று தான். நிலா - அது தேய்வதும் இல்லை வளர்வதுமில்லை. பாருங்கள் சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோம். இந்தச் சுற்றைக் காட்டும் வட்டந்தான் இந்தச் சிவ தாண்டவத்தை அடக்கி நிற்கும் பூஜ்ஜியத்தானின் இராஜ்ஜியத்தைக் காட்டும் வட்டமா? வாழ்க்கை என்பது ஒரு சக்கரமே. ஆதனால் தான் வரலாற்றையும் சக்கரமென்றார்கள் அன்றே. அன்று வாலி வதம் . இன்று புலி வதம் இரண்டுமே மறைந்திருந்து செய்யப்பட்ட போர்க் குற்றங்களே! “கிஸ்றி றிப்பீட்ஸ் இற்செல்வ்.” - ஆய்வாளர்கள் எதிர்வு கூற இதை விட என்ன கணிப்புச் சூத்திரம் தேவை? உயிரினம் சட உடலினதும் உயிரான ஆன்மாவினதும் கூட்டென்றால் இந்தக் உடலான கூட்டை விட்டு விலகும் ஆவி ……உயிர் எங்கே போகிறது? நம்மை விட்டுப் பிரிந்த நம் முன்னோரெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? ஆண்டுத் திவஜம் முடியும்வரை ஓராண்டு நம்மைச் சுற்றி வரும் அவர்களிற் பலர் பிறவிப் பயணத்தை தொடரலாம் அல்லது மேலெழுந்து ஈர்ப்பு சமநிலையுள்ள உயரத்தில் ஓய்வாக அசைவின்றி அமைதி அடையலாம். இருந்தாலும் இந்தத் சிரார்த்த திதிகள் போன்ற காலங்களில் பிதிர் தர்ப்பணங்களிற்கான தொடர்பு வாய்ப்புக்கள் அதிகம் என்கிறார்கள். ஆதற்கான விஞ்ஞான விளக்கத்தை பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். பெற்றவரோடு நாம் தொடர்பு கொள்ளக் கூடிய தினங்களே இந்த பறுவ அமாவாசைத் தினங்கள் என்கிறார்கள். நம்ப முடிகிறதோ இல்லையோ நாமும் நம் முன்னோர்க்கு நாளை ஒன்பதாம் தேதி திங்கட் கிழமை பிதிர் தர்ப்பணம் செய்வோமாக! ஓ! மானிடர்களே!! எல்லோரும் பிதிர் தர்ப்பணம் செய்வோமாக!!!.